அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக கரையோர மாவட்ட தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் 15 ஆயிரம் குடும்பங்கள் வரையும் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வெள்ளம் காரணமாக கல்முனை பிரதேசத்தில் 5500 குடும்பங்களும் சாய்ந்தமருதில் 4850 குடும்பங்களும் காரைதீவில் 600 குடும்பங்களும் சம்மாந்துறையில் 1350 குடும்பங்களும் ஏனைய பகுதிகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோரும் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,கல்முனை நாவிதன்வெளி போக்குவரத்துப் பாதையான கிட்டங்கி பாலம் வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்துள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கிட்டங்கி பால நிர்மாண வேலைகளும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.
அத்துடன், துறைநீலாவணை திரவந்தியமேடு கிராமத்திற்கான போக்குவரத்தும் வெள்ளம் காரணமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருவதுடன், காலநிலை மாற்றம் காரணமாகக் கடலும் கொந்தளிப்பாயுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் இப்பிரதேசத்தில் மீனுக்குத் தட்டுப்பாடும் நிலவுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை,அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு, நிந்தவூர்,நாவிதன்வெளி, சம்மாந்துறை,காரைதீவு,கல்முனை, பாண்டிருப்பு ஆகிய இடங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நகரப்பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றிக் காணப்படுவதுடன், உள்ளூர் பஸ் சேவைகளும் தடைப்பட்டுள்ளன