மட்டக்களப்பில் வெள்ளம் காரணமாக 5500 வீடுகள் சேதம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக 5500 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 1220 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளடன், 3452 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார். அதிகளவில் வாழைச்சேனை மத்திய செயலகப்பிரிவில் 512 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதுடன், 253 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேசமயம் காலநிலையில் எந்த விதமான முன்னேற்றமும் இன்றி தொடர்ச்சியான மழை பெய்து வருவதுடன் மேலும் சில நாட்களுக்கு இதே காலநிலை நிலவும் எனவும் வாநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்த மழைவீழ்ச்சியில் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 898.4 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தின் வருடாந்த மழைவீழ்ச்சி 1600 மில்லிமீட்டராகும்.
கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து இன்றும் மழை பெய்துள்ள நிலையில் இழப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தற்பொழுது பெய்துவரும் மழைகாரணமாக நாடுமுழுவதிலும் இதுவரையில் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 18 பேர் பலியாகியுள்ளதாகவும், சுமார் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது