மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையாலும் பல குளங்கள் திறக்கப்பட்டதாலும் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. பாதிக்கப்படாதோர் இல்லையெனுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
தொடரும் மழையால் இதுவரை வெள்ளத்தில் மூழ்காமல் தப்பியுள்ள கிராமங்களும் சில தினங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றுக்காலையில் சற்று ஓய்ந்திருந்த மழை பகல் வேளையானதும் மீண்டும்
அதிகரித்ததன் காரணமாக வெள்ள நிலை மிக மோசமடைந்துள்ளது. மாவட்டத்திலுள்ள வில்லுக்குளம் உடைப்பெடுத்துள்ளது. இதன் காரணமாக இதனை அண்டிய பல கிராமங்கள் நீரில் முற்றாக மூழ்கியுள்ளதுடன், அந்தப் பகுதி மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
படுவான்கரைப் பாதை போக்குவரத்துக்கு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக 14 கிராமங்களுடனான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
படுவான்கரையில் வவுணதீவு பிரதேசமே இம் மாவட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி ஏனைய பகுதிகளுடனான தரை வழித் தொடர்பை இழந்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவையே வழங்க முடிகிறது. ஆனால், ஏனைய உணவுப் பொருட்களை வழங்க முடியாதிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவிப் பொருட்கள் கிட்டாததால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும் போக்குவரவு செய்ய முடியாதிருப்பதாலும் உணவுப் பொருட்களை வாங்கிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுவர்கள், பிள்ளைகள் முதியோர்களுக்கு பால்மா, பிஸ்கற் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இவர்கள் பட்டினி நிலையை எதிர்நோக்குகின்றனர்.
இதயநோய், நீரிழிவு நோய் போன்றவற்றுக்கு கிளினிக் சிகிச்சை பெற்றுள்ளவர்கள் தமக்குரிய மருந்துகளைப் பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
அதேபோல நிறைமாதக் கர்ப்பிணிகள், குழந்தைகளைப் பிரசவித்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுகாதாரத் துணிகள் இன்றி கஷ்டப்படுகின்றனர்.
படுவான்கரை, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர், செங்கலடி, கிரான் பிரதேசங்களில் உள்ளவர்களே பெரிதும் கஷ்டப்படுகின்றனர்.இதேவேளை கன்னங்குடாவில் கடும் குளிர் வெள்ளத்தால் மரணமான கந்தக்குட்டி என்பவரின் சடலம் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இறந்தவர்களை அடக்கம் செய்யவும் முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.
வெள்ளத்தால் அனைத்துப் பகுதிகளிலும் தரைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் படகுகள் மூலம் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் பொலிஸாரும் முப்படையினரும் மக்களுக்கு போக்குவரவுக்கு உதவுகின்றனர். மீட்புப் பணிகளும் படகுகள் மூலமே நடைபெறுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் வி.யோகேஸ்வரனும் முடிந்தவரை மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்.
இதுவரை மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐந்தரை இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Pictures - http://www.facebook.com/battipeople
News - Thinakural
