மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களாக ஓய்ந்திருந்த கடும் மழை மீண்டும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் பெய்து வருவதால் இரு மாவட்டங்களதும் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி வருவதுடன் இயல்பு நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஓரிரு நாள் இடைவெளியில் அடை மழை தொடர்வதால் இரு மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்து மழை சற்று ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியதால் இருப்பிடங்களுக்கு திரும்பத் தொடங்கிய நிலையில் மீண்டும் கடும் மழை பெய்து வருவதால் முகாம்களுக்கு மீண்டும் திரும்ப வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது.ஏற்கனவே பெய்த அடை மழையால் இரு மாவட்டங்களிலும் பாரிய வெள்ளப் பெருக்கேற்பட்ட நிலையில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டு இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்கனவே 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 3 ஆம் திகதி முதல் 60 க்கும் மேற்பட்ட முகாம்களிலிருந்து மக்கள் தமது இருப்பிடங்களுக்குச் சென்றனர். 70 வீதமானவர் திரும்பி தத்தமது வீடுகளுக்குச் சென்றதால் 60 ஆக இருந்த முகாம்கள் 10 ஆகக் குறைந்ததுஇந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கடும் மழையால் 14 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளும் மீண்டும் முழுமையாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதனால் மக்கள் மீண்டும் முகாம்களை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக வானிலை அவதானநிலையம் தெரிவித்துள்ளதால் மாவட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் அவலங்களையும் எதிர்நோக்குகின்றனர்.அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் இதுவரை எவ்வித நிவாரணங்களும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லையென பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர பார்வையிட்டுச் சென்று பல நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் எந்தவிதமான நிவாரணமும் தமக்கு வழங்கப்படாமை குறித்து பாதிக்கப்பட்டோர் விசனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து இப்பிரதேச அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையிட்டு நிவாரணத்தை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனால் கொதித்தாறிய நீரைக் குடிப்பதற்கு பயன்படுத்துமாறும் முடியுமானவரை வீட்டிலேயே சமைத்து உண்ணுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பல்வேறுபட்ட காரணிகள் தொற்று நோய்களுக்குக் காரணமாக உள்ளதாகவும் இதில் குடிநீரும் உணவுவகைகளும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறையினர் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழும் பொதுமக்கள் இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
50 பாடசாலைகள் வெள்ளத்தில்; பலவற்றை மூடும் நிர்ப்பந்தம்
மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் 50 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஏறாவூர் ×கம வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி,வாழைச்சேனைப் பிரதேசங்களில் அந்நூர் மகா வித்தியாலயம், ஆயிஷா பாலிகா பிறைந்துறைச்சேனை அல் அஸ்ஹர், ஸாதுலியயா ஆகிய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஜெயினுதீன் தெரிவித்தார்.
ஏறாவூர்ஐயங்கேணி அப்துல் காதர், ஹிஸ்புல்லா, அமீர் அலி, ஸாஹிர் மௌலானா, றகுமானியா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாக பாடசாலைகளின் அதிபர்கள் அறிவித்துள்ளனர்.கல்குடா கல்வி வலயத்தில் பூலாக்காடு, பொண்டுகல் சேனை, புலிபாய்ந்தகல், வடமுனை, வீரநகர், குடும்பிமலை, முறுத்தானை, தரவை, மதுரங் கேணிக்குளம் ஆகிய பாடசாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தெரிவித்தார்.
வவுணதீவுமட்டக்களப்பு மேற்கு வலயத்தில் காஞ்சிரங்குடா, கொத்தியாபுல, மாவளியாறு, பன்சேனை, நரிப்புல் தோட்டம், கரவெட்டியாறு, மாவடிமுன்மார் ஆகிய பிரதேச பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மாணவர்களது வரவு மிகவும் குறைவாகக் காணப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், அம்பாறையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழைகாரணமாக மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயம் நீரில் மூழ்கியுள்ளது.இதன் காரணமாகப் பாடசாலை நடைபெறவில்லை. வகுப்பறைகள் நீரில் மூழ்கியுள்ளன. அதிபர் அறையில் மூன்று அடிக்கு மேல் வெள்ள நீர் நிறைந்துள்ளது.670 மாணவர்களுடன் குறைந்த வளங்களோடு காணப்படும் இப்பாடசாலை வருடாவருடம் மழை காலங்களில் இவ்வாறு நீரில் மூழ்குவது தொடர் கதையாகவே உள்ளது. மாணவர்கள் நிம்மதியாகக் கற்கமுடியாத நிலையும் ஆசிரியர்கள் ஒழுங்காகக் கற்பிக்க முடியாத சூழலும் காணப்படுகிறது.
திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போதைய மழை வெள்ளம் காரணமாக இப்பாடசாலை மாணவர்களுக்கான கல்வி பாதிப்படைந்துள்ளது.மேலும் கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள சண்முகா மகா வித்தியாலயம், கண்ணகி இந்து வித்தியாலயம், காரைதீவு,கல்முனை ஸாஹிரா கல்லூரி, அஸ்ஸீகரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்முனைக் கல்வி வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் தெரிவித்தார்.
பாடசாலைகளை மூடும் அதிகாரம் பணிப்பாளர்களுக்கு
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மீண்டும் கடும் மழையால் வெள்ள நிலைமை மிக மோசமாகக் காணப்படுவதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை மூடும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட கல்வி வலயபணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம்.நிஷாம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலிலுள்ள பாடசாலைகளே வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அவ்வலயங்களுக்கான கல்விப்பணிப்பாளர்கள் நிலைமையினை ஆராய்ந்து பாடசாலைகளை மூடலாமெனவும், அவ்வாறு மூடப்பட்ட நாட்களுக்கான பாடசாலை தினங்களை விடுமுறை நாட்களில் மீண்டும் நடத்தி கல்வியை தொடர நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்பாளர் நிஷாம் கேட்டுள்ளார்.
சில பாடசாலைகளை மூடிவிட்டு அதிபர்கள் கையொப்பம் இடுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தவறாகும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் செயலாகும். பாடசாலை மூடப்பட்டால் அத்தினத்திற்கு பதிலாக விடுமுறை நாட்களில் பாடசாலையை மீண்டும் நடாத்துவதே மாணவர்களின் கல்வியை பாதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.