மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும்பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி முதல் பெய்துவரும் அடை மழை பெரும் வெள்ளமாக உருவெடுத்து கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதியையும் சின்னாபின்னமாக்கி கோடிக்கணக்கான ரூபா சேதங்களை ஏற்படுத்திச்சென்றது.
இந்த நிலையில் கடந்த 20ஆம் திகதிமுதல் மாவட்டத்தில் மழை ஓய்ந்து வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில் மீண்டும் நேற்று முதல் பலத்த மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவருகின்றது.
இதன் காரணமாக மாவட்டத்தின் மிகப்பெரும் குளங்கள் மீண்டும் நிரம்பி வழியும் நிலைக்குச்சென்றுள்ளன.
இதன் காரணமாக மாவட்டத்தின் மிகப்பெரும் குளங்கள் மீண்டும் நிரம்பி வழியும் நிலைக்குச்சென்றுள்ளன.
தற்போது உன்னிச்சைக்குளம் நான்கு அடி திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் உருகாமம் குளம்எட்டு அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் தெரிவித்தார்.
எனினும் இதன் காரணமாக பெரியளவில் வெள்ளப்பாதிப்புகள் இல்லையென தெரிவித்துள்ள அவர்எனினும் தொடர்ந்து மழை பெய்யுமானால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை தொடரும் மழை காரணமாக கிராண் பாலத்தின் மேலாக வெள்ளநீர் செல்வதால் தரவை பகுதிக்கான போக்குவரத்துக்கள் இன்று முதல் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தரவைப்பகுதியில் உள்ள பல கிராமங்களைச்சேர்ந்த மக்கள் மட்டக்களப்பு நகருக்கு வரமுடியாத நிலையேற்றப்பட்டுள்ளது.
இதேபோன்று மண்டூர் – வெல்லாவெளி வீதியின் மேலாக வெள்ள நீர் பாய்ந்துசெல்வதால் மண்டூர் ஊடாக படுவான்கரைப்பகுதிக்கு செல்லும் பயணங்கள் தடைப்பட்டுள்ளன.