அம்பாறை, பெரிய நீலாவணை, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், காத்தான்குடி நிருபர்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பெய்த திடீர் மழையால் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுவிடலாமென மக்கள் மத்தியில் அச்ச நிலையும் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை முதல் நேற்று புதன்கிழமை காலை வரையும் இந்த மழை பெய்துள்ளதுடன் நேற்று இப்பகுதிகளில் மப்பும் மந்தாரமும் காணப்பட்டதுடன் இடையிடையே மழைதூறியவண்ணமிருந்தது.
அம்பாறையில் ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களின் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென இந்த மழை பெய்துள்ளதால் மக்கள் மத்தியில் அச்ச நிலைமை காணப்படுகின்றது.
மீண்டும் வெள்ளப்பெருக்கும் அழிவுகளும் ஏற்பட்டு விடலாமென்ற அச்சமும் என்ன செய்வதென்று தெரியாமலும் மக்கள் அவதிப்பட்டதையும் காண முடிந்தது.
நேற்றைய தினம் பாடசாலைக்கு குறைவான மாணவர்களே வந்தனர். அதேபோல அரசு தனியார் அலுவலகங்களிலும் குறைந்த ஊழியர்களே காணப்பட்டனர்.
பல கிராமங்கள் உள்ளூர் வீதிகளில் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. வடிகான்களிலும் வெள்ளம் நிரம்பிக் காணப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் நேற்று புதன்கிழமை வரை கடும் காற்றுடனான மழை பெய்ததால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற அச்சமும் பீதியும் மக்கள் மத்தியில் காணப்பட்டது.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் தொடராக மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் தமது உடைமைகளையும் வீடுகளையும் விட்டு 175 க்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தங்கியிருந்து பல் வேறு அவலங்களையும் அசௌகரியங்களையும் சந்தித்து கடந்த வாரமே தமது இல்லங்களுக்கு சென்று துப்புரவு செய்து மீள்குடியேறிய நிலையில் மீண்டும் மழைபெய்வதானது ஒருவிதமான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
கடும் காற்று பலமாக வீசும் என வளிமண்டலத் திணைக்களம் அறிவித்துள்ளதால் அச்சமான நிலைமையே காணப்படுகின்றது.
பரவலாக காற்றுடனான மழை பெய்வதால் தண்ணீர் வற்றிய இடங்களில் எல்லாம் நீர்தேங்கி நிற்கின்றது. இந்நிலைமை காரணமாக மக்கள் பலத்த அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்
