அம்பாறையில் வெள்ளத்தால் 1,70,000 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை முற்றாக அழிவு
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் நெற் செய்கையாளர்கள், மேட்டுநில பயிர்ச் செய்கையாளர்கள், மரக்கறி செய்கையாளர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழமையாக அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும் போகத்தின் போது கூடுதலான விவசாய நிலங்கள் நெற்பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. கூடுதலான விளைச்சல் இம்முறை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளின் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாலும் பயிர்கள் அழிவுக்குள்ளானதாலும் மிகவும் கவலையடைந்துள்ளனர். நெற்பயிர்கள் மட்டுமல்லாது வயல் நிலங்களும் நீர்ப்பாசன வடிகான்களும் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் நஷ்டஈடு வழங்குமாறு அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
பெரும்போக நெற்பயிர் செய்கையில் வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் வயல்நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.