சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் பிரிவிக்குட்பட்ட தொய்யம் வட்ட கிழக்குப் பிரதேசத்தில் சுமார் 590 ஏக்கர் வயல் நிலம் முற்றாகச் சேதம் அடைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பெய்த அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பூலாக்காடு,தொய்யம் வட்ட பிரதேசத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த நெல் காணியில் நீண்டநாட்களாக நீர்தேங்கி நின்றதால் கதிருடன் கூடிய நெல் முற்றாக அழிவடைந்துள்ளதுடன், ஆற்றின் ஓரமாகவுள்ள வயல்களும் வயலுக்குச் செல்லும் வீதிகளும் முற்றாக சேதத்திற்குள்ளாகியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று தெற்கு, மல்வத்தை, அக்கரைப்பற்று கிழக்கு,தம்பிலுவில்,சம்மாந்துறை,பொத்துவில்,மத்திய முகாம், அட்டாளைச்சேனை, உகன், மகாஓயா,நிந்தவூர்,இறக்காமம், தமன,தெஹியத்தகண்டிய,குமுண போன்ற பிரதேசங்களில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 160 ஏக்கர் நெற்காணிகள் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளதுடன்,6120 ஏக்கர் உப உணவுப் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தினால் விவசாய திணைக்களத்திற்கும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை,வீதி அபிவிருத்தி அதிகாரசபை,நீர்ப்பாசனத் திணைக்களம் என்பவற்றுக்கு பல மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாய உதவி ஆணையாளர் ஜே.பி.ஏ.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
