மட்டக்களப்பு படுவான்கரையில் வீட்டுக்கூரைகள், மரக்கிளைகளிலிருந்து மீட்கப்படும் மக்கள் சகல பகுதிகளும் வெள்ளக்காடு



மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 2,25,080 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 21,487 குடும்பங்களைச் சேர்ந்த 78,973 பேர் 177 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 37,362 குடும்பங்களைச் சேர்ந்த 1,46,107 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மாவட்டத்தின் மேடான ஒரு சில பகுதி தவிர மட்டக்களப்பு நகர் உட்பட பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கியுள்ளன. நேற்று சற்று மழை குறைவடைந்திருந்தது. இந்நிலைமை நீடிக்குமாயின் இன்று வெள்ளம் வடிவதற்கான சாத்தியம் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வருடாந்த மழை வீழ்ச்சி 1600 மில்லி மீற்றராகக் காணப்பட்ட போதும் ஜனவரி முதலாந் திகதி முதல் நேற்று முன்தினம் முற்பகல் 11.30 மணிவரை 1706.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சிவதாஸ் தெரிவித்தார். இதேவேளை சனிக்கிழமை காலை 8.30 மணிவரையான 48 மணித்தியாலயத்துக்குள் 272.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் பகல் வேளை கூடுதலான மழை வீழ்ச்சி இடம்பெற்றது.

மாவட்டத்தின் இயல்பு வாழ்வு வெள்ளத்தினால் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது. போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பகுதிகளாகக் காணப்படும் படுவான்கரை எழுவால்கரையின் தொடர்பு துண்டிக்கப்பட்டன. படுவான்கரை எழுவான்கரையினை இணைக்கும் வலையிறவு வவுணதீவு பால வீதி, பட்டிருப்பு பெரிய போரதீவு பால வீதி, செங்கலடி கறுத்தப்பாவ வீதி, கிரான் குடும்பி மலை வீதி என்பவற்றால் ஐந்து அடிக்கு மேற்பட்ட நீர் பாய்ந்ததினால் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இவற்றுக்கு இயந்திரப் படகுச் சேவை வழங்கப்பட்டது. அதேபோன்று மட்டக்களப்பு கொழும்புக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. புகையிரதச் சேவை கொழும்பிலிருந்து கெக்கிராவை வரையே இடம்பெற்றது.

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மேட்டுப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டனர். உறவினர், நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தவர்கள் தவிர பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பைத் தேடிக் கொண்டு இருந்தனர். இவர்கள் இடம்பெயர்ந்திருப்பின் இடம்பெயர்ந்தோர் தொகை மேலும் அதிகரித்து இருக்கும்.

14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெள்ளத்தின் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தபோதும் படுவான்கரையில் குளங்கள் இருப்பதனால் குளங்கள் திறந்து விடப்பட்டதனால் வேகமாக வந்த நீர் படுவான்கரையினை முற்றாக அக்கிரமித்தது. இதனால் கிராமங்களுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் வீட்டுக் கூரைகளிலும் மரத்தின் கொப்புகளிலும் தஞ்சமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

வவுணதீவு, பட்டிப்பனை, வெல்லாவெளி, கிரான், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே மிக மோசமாகப் பாதிப்பு ஏற்பட்டது.

வவுணதீவில் சின்னத் தோட்டம், தில்லர் தோட்டம் ஆகிய கிராம மக்கள் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டனர். வெல்லா வெளிப் பிரதேசத்தில் வேத்து சேனை, ஆனைகட்டியவெளி, றாணமடு, நாவிதன் வெளி, காக்காச்சி அட்டை கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கி மக்கள் மீட்கப்பட்டனர். கிரான் பிரதேச செயலகப் பிரிவில் சாறாவெளி, முறுத்தானை, பிரம்படித்தீவு ஆகிய கிராம மக்கள் கிண்னையடி துறை ஊடாகவும் யூலாக்காடு, பொண்டுகள் சேனை, செட்டியார் குடியிருப்பு, புலிபாய்ந்தகல், பேரில்லாவெளி கிராம மக்கள் கிரான் துறை ஊடாக படகு மூலம் மீட்கப்பட்டனர்.

உள்ளூர் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது. வாகரைக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. கதிரவெளி வெருகல், கட்டுமுறிவு, பனிச்சங்கேணி பாலம் என்பவற்றால் நீர் பரவுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் தஞ்சமடைந்த மக்களுக்கு உணவுப் பொருட்களை மட்டக்களப்பிலிருந்து கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டன.

வவுணதீவுப் பிரதேசத்தில் ஆயித்தியமலை வீதி, வவுணதீவு கன்னன்குடா வீதி, மகிழவெட்ட வான் கரவெட்டி வீதி உட்பட பிரதான போக்குவரத்து பாதை உட்பட உள்ளூர் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

வெல்லாவெளி பாலையடி வட்டை வீதி, வெல்லாவெளி மண்டூர் வீதி, பெரிய போரதீவு மழுகாமம் வீதி, மண்டூர் வைக்கலை வீதி, மண்டூர் நாவிதன்வெளி வீதி போன்ற பிரதான வீதிகள் உட்பட உள்ளூர் வீதிகளும் முற்றாக துண்டிக்கப்பட்டன. இப்பகுதிக்கு இயந்திரப் படகுச் சேவை வழங்கப்பட்டன.

இதேவேளை வவுணதீவு பிரதேசத்தில் கட்பாக்காடு வீதி, வெல்லாவெளியில் திக்கோடை வீதி என்பன வெள்ளத்தினை உடைத்துள்ளது. மண்டூர் கறுத்தப்பாலம் சரிந்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த வெள்ளத்தினால் சுமார் 60 ஆயிரம் கால்நடை இறந்தும் காணாமல் போயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனைவிட இவ் வெள்ளம் பாரியதாகக் காணப்பட்டதால் இந்த தொகை அதிகரித்து இருக்கும். அத்துடன் மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ஏக்கர் விவசாயச் செய்கையும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.

படுவான்கரையில் உள்ள அனைத்து மண்வீடுகளும் இவ் வெள்ளத்தினால் முற்றாகச் சேதமடைந்திருக்கலாம். நகரில் உள்ள கல் வீடுகளில் கூட வெடிப்பு ஏற்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
Tags: , ,

About author

For news updates connect our facebook www.facebook.com/thirukkovil.