பெரியகல்லாறில் பல ஆலயங்களில் விக்கிரகங்கள் விஷமிகளால் சேதம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் ஆலயங்களில் உள்ள விக்கிரகங்கள் பல விஷமிகளால் உடைக்கப்பட்டு வருகிறது.
பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தின் பிள்ளையார் ஆலயம்,நவக்கிரக ஆலயம் போன்றவற்றின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தலைவர் சீ.செல்வராசா தெரிவித்தார்.
அண்மைக்காலமாக பெரியகல்லாறு பகுதியில் உள்ள இந்து ஆலயங்கள் திட்டமிட்டு உடைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளது.
அண்மையில் இப்பிரதேசத்தில் வரலாற்றுப்புகழ் பெற்ற ஆலயங்களான ஸ்ரீவடபத்திர காளியம்மன் ஆலயம்,கடலாச்சியம்மன் ஆலயம் என்பனவும் விஷமிகளால் உடைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தின் பிள்ளையார் ஆலயம்,நவக்கிரக ஆலயம் போன்றவற்றின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவங்கள் கொள்ளையிடுவதை நோக்காகக் கொண்டு இடம்பெறவில்லையெனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்