படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையில் ஜப்பான் உதவியுடன் புதிய பாலம்



மட்டக்களப்பின் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமான போக்குவரத்தில் மிக முக்கியமானதாக விளங்கும் மண்முனை ஆற்றினை கடப்பதற்கு அதனூடாகப் பாலம் ஒன்று அமைப்பதற்கு ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் நிதி உதவி வழங்குவதுடன் அதன் நிர்மாண வேலைகளிலும் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான மாநாடொன்று நடைபெற்றது. இதில் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வீ.முரளிதரன், மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வை.தர்மரெட்ணம், திட்டப்பணிப்பாளர், மற்றும் பட்டிப்பளை, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில் மண்முனைப் பால நிர்மாணம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் ஜெய்க்காவின் நகர மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரிவு மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புக்குப் பொறுப்பான பணிப்பாளர் கொஜிமா உமி கலந்து கொண்டு தமது உறுதி மொழியை வழங்கினார்.

பல கோடி ரூபா செலவில் அமையவுள்ள மண்முனைப் பாலமானது படுவான்கரை மக்களுக்கும் எழுவான்ரை மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

பாலத்தின் நிர்மாண வேலைகள் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கி சுமார் ஒரு வருட காலத்தில் நிறைவடையுமென ஜெய்க்கா பணிப்பாளர் தெரிவித்தார்.

Thinakural
Tags:

About author

For news updates connect our facebook www.facebook.com/thirukkovil.