கல்முனை நாவிதன்வெளி கிட்டங்கி வாவியில் படகு கவிழ்ந்து காணாமல்போன இருவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி அன்னமலைப் பகுதியைச் சேர்ந்த இருவர் கிட்டங்கி வாவியை வள்ளத்தில் கடக்கும் போது வள்ளம் கவிழ்ந்து வெள்ளிக்கிழமை காலை காணாமல் போனதைத் தொடர்ந்து பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.இதன்போது நேற்று சனிக்கிழமை காலை ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; கல்முனையில் இருந்து நாவிதன்வெளி பிரதேசத்துக்கு செல்வதற்கான கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கி நான்கு அடிக்கு மேல் வெள்ளம் பாய்வதால் நாவிதன்வெளி பகுதிக்கு செல்லும் மக்கள் வள்ளம்,தோணி என்பவற்றை பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு வெள்ளிக்கிழமை காலை 9 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற தோணி நீரின் வேகத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.இதன் போது அதில் இருந்த 7 பேர் பல சிரமங்களுடன் கரை சேர்ந்த போதும் இருவர் காணõமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்கள் நாவிதன்வெளி,அன்னமலை பகுதியைச் சேர்ந்த இராசையா அசோக்குமார்(வயது 42),முத்துராமன் கணேஷன் (வயது 37)ஆகியோராவர்.
இதனைத் தொடர்ந்து கிட்டங்கி வாவி படகுச் சேவை பொலிஸாரின் உத்தரவுக்கமைய தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதனால் நாவிதன்வெளி பகுதியில் இருந்து உணவுப் பொருட்கள் வாங்கச் சென்ற பல பொதுமக்கள் திரும்பிச் செல்ல முடியாத நிலையிலுள்ளனர். இவர்கள் சேனைக்குடியிருப்பு,நட்பிட்டிமுனை பிரதேசங்களிலே தங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காணாமல் போனவர்களுள் முத்துராமன் கணேஷன் என்பவரது சடலம் நேற்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றவரை தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்